அருட்தந்தை Petrus Andrews, கான்சர் நோயினால் பிடிக்கப்பட்டு, அவர் இறக்கும் தருவாயில் கூட, கட்டிலில் படுத்திருந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கும் காட்சியை நாங்கள் அனைவரும் இங்கு காண்கின்றோம். அவர் இறக்கும் தருவாயில் இருந்தும் கூட, தன்னை இறைவனோடு ஒப்பரவாக தவறவில்லை. ஒரு கத்தோலிக்கன் அவர்கள் குரு, துறவறத்தார் அல்லது பொதுநிலையினராக இருந்தாலும் கூட அவர்கள் திருப்பலி ஒப்புக்கொடுக்காமல் அல்லது திருப்பலியில் பங்கு பெறாமல் வாழக்கூடாது. இதை தான் புனித மதர் தெரேசா, குருக்களை பார்த்து, நீங்கள் ஒப்புக்கொடுக்கும் ஒவ்வொரு திருப்பலியும், நீங்கள் ஒப்புக்கொடுக்கும் உங்கள் முதல் மற்றும் கடைசி திருப்பலி என நினைத்துக்கொண்டு ஒப்புக்கொடுங்கள் என்று சொல்கிறார்.
ஒரு கத்தோலிக்கனின் அது உயர் செபம் திருப்பலி ஆகும். அது குருட்கள் மற்றும் துறவியர்களாக இருந்தாலென்ன அல்லது பொது நிலையினராக இருந்தால் என்ன திருப்பலி எல்லாருக்கும் பொதுவான, அதியுயர் செபமாகும். குருக்களின் அதியுயர் பணி திருப்பலி ஒப்புகொடுப்பது, பொதுநிலையினரின் அதியுயர் கடமை திருப்பலியில் பங்குபெறுவதாகும்.
திருப்பலியிலே சென்று இயேசுவின் பாடுகளில் பங்குபற்றுவதும் மேலும், அந்த பாடுகளில் இயேசுவோடு எம்மை இணைத்துக்கொண்டு, தந்தைக்கு எம்மை அன்றாடம் ஒப்புக்கொடுப்பதே நாம் தினம் செய்யும் பலியாகும்.
யார் இந்த திருப்பலியை ஒப்புக்கொடுகிறார்? கிறிஸ்து ஒப்புக்கொடுகிறார்.
கிறிஸ்து, யாருக்கு இந்த திருப்பலியை ஒப்புக்கொடுகிறார்? அவர் வானகத்தந்தைக்கு இத்திருப்பலியை ஒப்புக்கொடுகிறார்.
யாருக்காக கிறிஸ்து இந்த திருப்பலியை ஒப்புக்கொடுகிறார்? பாவிகளான எமக்காக இந்த திருப்பலியை ஒப்புக்கொடுக்கிறார்.
ஆகவே ஏன் நாங்கள் திருப்பலிக்கு போக வேண்டும்? தன்னை அப்ப வடிவில் எமக்கு உணவாகத்தந்துக்கொண்டிருக்கும் கிறிஸ்துவை நாம் எம் வாழ்வில் பெறவே, நாம் திருப்பலிக்கு போக வேண்டும். அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் இது உங்களுக்காக கை அளிக்கப்படும் எனது திருஉடல், திரு இரத்தம் என்று இயேசு தன்னை எமக்கு உணவாகத்தருகிறார். அதே போன்று அவர் “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.” [ யோவான் 6: 51] என்று தனது உடலை, இரத்தத்தை நாம் இவ்வுலகிலும், அதே போன்றே இறந்த பின் வானுலகத்திலும் உயிர் வாழ எமக்கு உணவாகத்தருகிறார்.
நான் எப்பொழுது திருப்பலிக்கு போக வேண்டும்? வருடத்தில் ஒரு முறையா? ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலா அல்லது ஒவ்வொரு நாளுமா? “எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.✠ வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்”[யோவான் 6: 54 – 57]. திருப்பலியின் மகிமையை நாம் உணர்ந்தோம் என்றால், எமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், திருப்பலிக்கு சென்று கிறிஸ்துவை நாம் உயிர் வாழ உணவாக பெற்றுக்கொள்வோம்.
திருப்பலிக்கு நான் ஏன் போக வேண்டும்? கிறிஸ்துவை உணவாக பெற நான் திருப்பலிக்கு போகவேண்டும், கிறிஸ்துவை உணவாக பெற நான் எப்படி எனது இதய ஆலயத்தை வைத்துக்கொள்ள வேண்டும்? தூயதாக வைத்துக்கொள்ள வேண்டும், எனது இதய ஆலயத்தை தூயதாக வைத்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? எனது இதய ஆலயத்தை தூயதாக வைத்துக்கொள்ள நான் நல்ல, முழுமையான மற்றும் குருவுக்கும் ஒன்றையும் மறைக்காத நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். ஏனெனில் புனித பாவிலு அடிகளார் சொல்வது போன்று, உனது உடல் இறைவன் வாழும் இல்லம் என்பதை நீ மறந்து விட்டாயா ?
திருப்பலியே இவ்வுலகில் ஒவ்வொரு கத்தோலிக்கனினதும் அதிஉயர் செபமாகும். புனித ஜோன் மரிய வியாணி, திருப்பலியின் மகிமையை நாங்கள் உண்மையாகவே உணர்ந்தோமென்றால், நாங்கள் மகிழ்ச்சியிலே உயிர் விடுவோம் என்று எமக்கு சொல்கிறார்.